நீலாங்கரை அருகே பயிற்சி போலீஸ்காரர் தற்கொலை: அதிக வேலைப்பளு காரணமா?
நீலாங்கரை அருகே பயிற்சி போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன்(வயது 28). போலீஸ் வேலைக்கு தேர்வான இவர் அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.
அங்கு பாலமுருகனுக்கு இரவு, பகலாக கடுமையான பணிகள் தரப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக பாலமுருகன் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்று அவரது பெற்றோரிடம் கூறி வந்தார்.
மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் போலீஸ் வேலைக்கு சேர்ந்த தனக்கு மிகவும் தொல்லைகள் தரப்படுவதாகவும் அவர் பெற்றோரிடம் புலம்பி வந்தார்.
அவரது பெற்றோர் பாலமுருகனை சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் பாலமுருகன் விடுப்பு எடுத்தார். பின்னர் விடுப்பு முடிந்து நேற்று முன்தினம் பயிற்சிக்கு சென்ற அவர் வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போலீஸ் பயிற்சி அகாடமியில் இருந்து பேசிய பெண் அதிகாரி ஒருவர் உடனடியாக பயிற்சிக்கு வரும்படி பாலமுருகனிடம் கூறியதாக தெரிகிறது.
‘‘வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் பயிற்சிக்கு வா’’ என்று கூறுகிறார்கள் என அவர் தனது தந்தையிடம் அழுது புலம்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பாலமுருகன் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கழிவறையின் கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு பாலமுருகன் சேலையின் மூலம் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலருமுருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அதிக வேலைப்பளு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி பாலமுருகனின் தந்தை விஜயரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது மகன்(பாலமுருகன்) கடந்த 4 மாதங்களாக கடும் நெருக்கடி தரப்படுவதால் தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று கூறிவந்தார். ‘‘உனது விருப்பம் எதுவோ அதை செய்’’ என்று கூறினேன். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தபோது உடனடியாக பணிக்கு வர வேண்டும் என செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டதால் மனமுடைந்தார்.
பாலமுருகனின் 2 சகோதரிகளில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. பாலமுருகனுக்கும் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய அவரை இப்படி பிணமாக பார்ப்பது வேதனையளிக்கிறது. என் மகன் சாவில் உண்மையான காரணங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் பயிற்சி அகாடமியில் உள்ள அதிகாரிகள் பயிற்சி பெறும் போலீஸ்காரர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களாக போலீஸ் பணியில் உள்ளவர்கள் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. முறையான விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்களை இனியும் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.