காவிரி வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்


காவிரி வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்
x
தினத்தந்தி 15 May 2018 4:45 AM IST (Updated: 15 May 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு திட்டம் குறித்து கருத்து கேட்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும் என்று சிதம்பரத்தில் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தவணை வாங்கி, தவணை வாங்கி இன்று(அதாவது நேற்று) ஒரு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கிறார், மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முடியவில்லை. ஆனால் நகல் திட்டம் தயாராக உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெறாததால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை என்பது போன்ற காரணங்களை மத்திய அரசு 2, 3 முறை கூறி வந்தது.

ஆனால் கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர் தற்போது பிரதமர் வெளிநாடு சென்றுவிட்டார். அமைச்சரவையும் கூடியதாகவும் தெரியவில்லை. பிரதமர் ஒப்புதல் பெற்றதாகவோ நிரூபிக்க படவில்லை. ஆனால் ஒரு வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் தான் உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு இழுத்தடிப்பு செய்யாமல், இதை ஏற்கனவே தாக்கல் செய்து இருக்கலாம். ஏனெனில் 16–ந்தேதி(நாளை) வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், அடுத்ததாக நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை வந்துவிடுகிறது.

இதனால் ஜூன், ஜூலையில் தான் வழக்கு விசாரணைக்கு வர முடியும். இதன் மூலம் நீதிமன்றம் விடுமுறையால் காலதாமதம் ஏற்படுவதை தடுத்து இருக்க முடியும். ஆனால் மத்திய அரசு பொய்யான காரணத்தை கூறி இழுத்தடிப்பு செய்வது நியாயம் அல்ல, அநீதி.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு திட்டத்தில், தமிழகத்துக்கான நீரின் அளவை பெற்று தருவதற்கான உரிய அதிகாரங்கள் அந்த வாரியத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை. உரிய அதிகாரம் கொண்ட ஒரு காவிரி மேம்பாட்டு வாரியம் அமைத்தால் தான் நடுவர் மன்ற தீர்ப்பு அமலாகும், இல்லையெனில் வெற்று காகிதமாகிவிடும் என்று ஏற்கனவே வெளியான நடுவர் மன்ற தீர்ப்பிலேயே தெரிவித்து இருந்தனர்.

மேலும் கேரளாவில் இருக்கிற ஒன்று இரண்டு நீர்நிலையங்கள், கர்நாடகத்தில் ஹேமாவதி, கிருஷ்ணசாகர், மேட்டூர் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் காவிரி மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கினால் தான் உரிய அளவு நீர் கிடைக்கும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பில் சொல்லி இருந்தனர். அதுபோன்ற வாரியம் தான் தற்போது அமைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

எனவே தற்போது மத்திய அரசு அளித்துள்ள வரைவு திட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திட வேண்டும். அதில் இந்த திட்டத்தை ஏற்று கொள்வதா, மாற்று என்ன கேட்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பாக 16–ந்தேதி(அதாவது நாளை) நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது முன்மொழிய வேண்டி இருப்பதால், நாளைக்கே(இன்றே) அவசரமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில், நடுவர் மன்றம் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிகரான ஒரு அமைப்பு வந்தால் தான் காவிரி பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story