விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கலெக்டரிடம் மனு
விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் விசைத்தறியாளர்கள் ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கடந்த 2014–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி உயர்த்தப்பட்ட வழங்காததால் தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. கூலி உயர்த்தி வழங்கப்படாததால் தொழிலை மேற்கொண்டு செய்ய வங்கிகள் உள்பட பல இடங்களில் கடன் தொகைகளை பெற்று செய்து வந்தோம். தற்போது தொழில் நலிவடைந்துள்ளது. விசைத்தறியாளர்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதனால் விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஏற்கனவே மனு அளித்திருந்தோம். ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னோடி வங்கிகளுக்கும், விசைத்தறியாளர்கள் கடன் பெற்ற வங்கிகளுக்கும் எந்த அறிவுறுத்தலும் இல்லை. இதனால் வங்கிகள் கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்து வருகின்றன. எனவே விசைத்தறியாளர்கள் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். எனவே விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்று கூறியிருந்தனர்.
திருப்பூர் டவுன் தாராபுரம் ரோடு தில்லைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘ தில்லைநகர் முதல் வீதியில்உள்ள கட்டிடத்தில் பல விரிசல்கள் உள்ளது. இந்த கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ஆனால் அதன் அருகில் 300–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள், கோவில்கள் போன்றவை உள்ளது. செல்போன் கோபுரம் அமைத்தால் கட்டிடம் இடிபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், செல்போன் கோபுரம் மூலம் ஏற்படும் கதிர்வீச்சின் காரணமாக பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றிருந்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி பட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் மூலம் குடிநீர் பெற்று வருகிறோம். தற்போது கோடையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. தற்போது ஒரு மாதமாக ஆற்று நீரும் வருவதில்லை. எனவே குடிநீர் வசதியும், எரியாமல் இருக்கும் தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டும்’’ என்றிருந்தனர்.
ஆதி தமிழர் பேரவையினர் கொடுத்த மனுவில் ‘‘ பெருமாநல்லூரை அடுத்த காளிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். காளிபாளையம்புதூரில் வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது. இந்த இலவச பட்டா நிலத்தை அளந்து கொடுக்க வேண்டி 13 வருடங்களாக மனு கொடுத்தும் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே காளிபாளையம் பகுதியில் வழங்கப்பட்ட நிலத்தை பயனாளிகளுக்கு முறையாக அளந்து வழங்க வேண்டும்’’ என்றிருந்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆதித் தமிழர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த ஆதித் தமிழர் பேரவையினரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன் அவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். இதன் பின்னர் போராட்டம் நடத்தமாட்டோம், மனு மட்டும் கொடுத்து விட்டு செல்வோம் என ஆதித் தமிழர் பேரவையினர் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு மனு கொடுக்க சென்றனர்.