ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை 88 பேர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை 88 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:09 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 88 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மீத்தேன், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், ஆற்றுமணல், தாதுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லையில் மாநில குழு உறுப்பினர் பாலசந்திரன் தலைமையில் இளைஞர் பெருமன்றத்தினர் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் அவர்களை தடுத்துநிறுத்தினர். உடனே அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

88 பேர் கைது

அப்போது அவர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் பாலன், செயலாளர் இசக்கித்துரை, பொருளாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 88 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story