ஸ்ரீலட்சுமிபுரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஊர்மக்கள் மனு


ஸ்ரீலட்சுமிபுரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஊர்மக்கள் மனு
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் ஸ்ரீலட்சுமிபுரத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஊர்மக்கள் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். இதே போல நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனு அளிப்பதற்காக ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் இவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை அளித்தனர். அப்போது அஞ்சுகிராமம் ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் ‘நாங்கள் அஞ்சுகிராமம் ஸ்ரீலட்சுமிபுரத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடோ, நிலமோ சொந்தமாக இல்லை. மிகவும் ஏழ்மை நிலையில் குடும்பம் நடத்துகிறோம். எனவே நாங்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜாண் விக்டர் தாஸ் தலைமையில் ஏராளமான பெண்கள் கூட்டாக வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சட்டப்பட்டுள்ளது. 3 முதல் 9 மாதம் வரை சம்பளம் பெறாமல் பணியாற்றுவதாக தெரிகிறது. குறிப்பாக தோவாளை தாலுகா நாவல்காடு அண்ணா காலனியை சேர்ந்த வசந்தா (வயது 55) என்பவருக்கு 37 நாட்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். எனினும் வசந்தா வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை. இதை எல்லாம் பார்க்கும் போது அரசு பணி முடங்கி உள்ளது போன்றும், பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது போன்றும் தெரிகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story