காவிரி பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க கோரி கர்நாடகாவுக்கு நடைபயணம் புறப்பட்ட 157 பேர் கைது


காவிரி பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க கோரி கர்நாடகாவுக்கு நடைபயணம் புறப்பட்ட 157 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க கோரி திருச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு நடைபயணமாக புறப்பட்ட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீதியை தாமதப்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டை கண்டித்தும், குறைந்தபட்ச நீரைகூட தர மறுக்கும் கர்நாடகாவின் போக்கை கண்டித்தும், இவற்றுக்கு முடிவுகட்ட வேண்டுமானால், காவிரி பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க கோரி, கர்நாடகா மாநிலம் நோக்கி ‘காவிரி மீட்பு நடைபயணம்’ மேற்கொள்ள போவதாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு திருச்சி மாநகர போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நேற்று திருச்சி தலைமை தபால் நிலையம்

முன்பு இருந்து நடைபயணம் தொடங்கும் என அக்கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தெரிவித்திருந்தார். இதையொட்டி, நேற்று காலை 8 மணி முதலே தலைமை தபால் நிலையம் முன்பு திரளான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலை 11.30 மணிக்கு, நடைபயணம் மேற்கொள்வதற்காக திரளான பெண்களுடன் அக்கட்சியினர் திரண்டனர். அப்போது காவிரி பிரச்சினையை இனி சர்வதேச நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனவும், சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தால் தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது என கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார்.மாநில வர்த்தக அணி செயலாளர் சக்கரை கனி, திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சித்திக், தஞ்சை மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சந்திரசேகரன், வெற்றிச்செல்வன், தர்மலிங்கம், சபி அகமது, நஜ்முதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து கர்நாடகா நோக்கி நடைபயணம் செல்ல புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நடைபயணம் புறப்பட்ட 157 பேரை, கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் 97 பேர் பெண்கள். 2 பெண்கள் கைக்குழந்தைகளுடன் இந்த நடைபயண போராட்டத்தில் பங்கேற்றனர்.கைதான அனைவரும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 

Next Story