மாவட்ட செய்திகள்

ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்க கிராமமக்கள் கலெக்டரிடம் மனு + "||" + The petition to the village collector to set up the bore and provide drinking water

ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்க கிராமமக்கள் கலெக்டரிடம் மனு

ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்க கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆழ் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 286 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.


அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பழைய அங்கனூர் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், அங்கனூர் கிராமத்திற்கு அருகில் உள்ள சிவராமபுரம் கிராமத்தில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்குழாய் தண்ணீரை 3 கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காக தினமும் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்து வரவேண்டியுள்ளது. எனவே எங்களது கிராமத்துக்கு தனியாக ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இணைசெயல்பாடுகள், கலை இலக்கியம், விளையாட்டு, அறிவியல் கண்காட்சி மற்றும் பொதுத்தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட தேர்வுக்குழு மூலம் 10-ம் வகுப்பு முடித்த 15 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக் காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அதிகாரி செந்தில், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.