காவல் கட்டுப்பாட்டு அறையில் கிரண்பெடி திடீர் ஆய்வு
புதுவை காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவையில் குற்றச்சம்பவங்கள் குறித்து 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1031 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டு அதிலும் புகார்கள் பெறப்பட்டன.
இந்த தொலைபேசிகளில் புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீப காலமாக 1031 என்ற எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கவர்னர் கிரண்பெடியின் கவனத்துக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த முறை ஆய்வு செய்தபோது புகார் தொடர்பாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இருந்து வந்தது. நேற்று நடந்த ஆய்வின்போது அவ்வாறு செய்யப்படாமல் இருப்பதை கண்ட கவர்னர் கிரண்பெடி, அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமிடம் கேள்வி எழுப்பினார்.
இதுவரை எவ்வளவு புகார்கள் வந்துள்ளன? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து கிரண்பெடி விசாரித்தார். 1031 என்ற எண்ணிற்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
காவல் கட்டுப்பாட்டு அறை சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்ட கவர்னர் கிரண்பெடி அப்போது பணியில் இருந்த போலீசாரை கண்டித்தார். கட்டுப்பாட்டு அறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.