மின்சார ரெயிலில் அடிபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் பலி; தண்டவாளத்தை கடந்தபோது துயரம்


மின்சார ரெயிலில் அடிபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் பலி; தண்டவாளத்தை கடந்தபோது துயரம்
x
தினத்தந்தி 15 May 2018 4:23 AM IST (Updated: 15 May 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தண்டவாளத்தை கடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி - காந்திவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரெயிலில் இருந்து 4 வாலிபர்கள் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வேகமாக வந்த மின்சார ரெயில் அவர்கள் மீது மோதி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 4 பேரும் இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் பலியானவர்கள் பெயர் தத்தாபிரசாத் எம்.சவான் (வயது20). அவரது தம்பி சாய்பிரசாத் எம்.சவான் (17), மற்றும் சாகர் எஸ்.சவான் (23), மனோஜ் டி.சவான் (17) என்பதும், சிந்துதுர்க் மாவட்டம் கன்கவலியை சேர்ந்த இவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பிய அவர்கள் மின்சார ரெயில் நின்றதும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறுக்கு வழியில் செல்வதற்காக தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரை பறிகொடுத்ததும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story