பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா தனித்து போட்டி


பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா தனித்து போட்டி
x
தினத்தந்தி 14 May 2018 11:32 PM GMT (Updated: 14 May 2018 11:32 PM GMT)

பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா-பா.ஜனதா கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருந்தவர் நானா பட்டோலே. கடந்த ஆண்டு பா.ஜனதா தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதற்கிடையே பால்கர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல பலுஸ்-கடேகாவ் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதங்ராவ் கதம்(காங்கிரஸ்) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் காலியாக உள்ள மேற்கண்ட இரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை 31-ந் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்தநிலையில் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து பண்டாரா-கோண்டியாவில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மதுக்கர் குக்கடேவும், பால்கர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாமோதர் ஷிங்டேவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பண்டாரா- கோண்டியாவில் பா.ஜனதா சார்பில் ஹேமந்த் பட்லே வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் சிவசேனா தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை.

ஆனால் பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிந்தாமன் வாங்காவின் மகனான சீனிவாஸ் வாங்கா பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து பால்கர் தொகுதியில் சீனிவாஸ் வாங்காவை சிவசேனா வேட்பாளராக அறிவித்தது.

பால்கர் இடைத்தேர்தலில் இருந்து விலகுமாறு பா.ஜனதா சார்பில் சிவசேனாவுடன் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராஜேந்திர காவித்தை, பா.ஜனதா பால்கர் தொகுதியில் தனது வேட்பாளராக நிறுத்தியது. மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே ஏற்பட்டு உள்ள இந்த மோதல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தொகுதியில் பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

சாங்கிலி மாவட்டம் பலுஸ்-கடேகாவ் சட்டமன்ற தொகுதியில் பதங்ராவ் கதமின் மகன் விஸ்வகீத் கதம் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். சாங்கிலியில் கதம் குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம் என கூறப்படுகிறது.

சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது ஆதரவை விஸ்வகீத் கதமுக்கு தெரிவித்தன. ஆனால் பா.ஜனதா சார்பில் சங்ராம்சிங் தேஷ்முக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று திடீரென அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதைத்தொடர்ந்து பிரதான கட்சிகள் யாரும் தேர்தல் களத்தில் இல்லாததால் பலுஸ்-கடகாவ் தொகுதியில் விஸ்வகீத் கதமின் வெற்றிவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story