மாவட்ட செய்திகள்

செயற்கை கரு + "||" + Artificial nucleus

செயற்கை கரு

செயற்கை கரு
ரு வளர்ச்சியில் ஏற்படக்கூடிய கோளாறுகளையும் ஸ்டெம் செல்கள் கொண்டு சரிசெய்யும் என்கின்றன சமீபத்திய சில மருத்துவ ஆய்வுகள்.
அம்மா என்ற உறவுதான் நம் வாழ்க்கைக்கு அடிப்படை என்று நம்புகிறது மனித இனம். ஆனால் அடிப்படையில், அம்மா என்ற உறவை உருவாக்குவதும், அதனை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும் ஒரு பெண் சுமக்கும் ‘கரு’தான்!

இயற்கையில், ஒரு கரு முட்டையும், விந்தணுவும் இணைந்து உருவாகும் கருவில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு வகையான உயிரணுக்கள் பல்கிப் பெருகி, மூளை, கண், காது, மூக்கு, இதயம், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து உடல் பாகங்களுடன் (பெரும்பாலும்) பத்து மாதங்கள் அல்லது நாற்பது வாரங்களில் முழுமைபெறும்போது குழந்தை என்ற ஒரு புதிய உயிர் பூமியில் பிறக்கிறது.

இனப்பெருக்கத்தின் மையமான இந்த உயிரியல் நிகழ்வு இயற்கையாக எந்தவிதமான கோளாறுகளும் அல்லது ஆபத்தான மாற்றங்களும் இல்லாமல் நிகழும்போது எந்தவொரு சிக்கலும் இல்லை.

ஆனால் கருவின் தோற்றம் முதல் அதன் தொடக்க நிலைகளின்போது இயல்புக்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அந்த கருவானது ஒரு குழந்தையாக முழுமையாக வளராமல் போகலாம். அல்லது குழந்தை பிறப்புக்குப் பின்னர் குழந்தையின் வளர்ச்சியின்போது ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.

மருத்துவம் அசுர வளர்ச்சி கண்டுள்ள இந்த 21-ம் நூற்றாண்டில், இயற்கை நம்மை கைவிடும்போது செயற்கை நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஏனென்றால், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயலிழந்து போனால், நம் உடலில் இருந்து சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்களை சோதனைக் கூடத்தில் வளர்த்தெடுத்து அதிலிருந்து செயற்கை உடல் பாகங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் விரைவில் கரு வளர்ச்சியில் ஏற்படக்கூடிய கோளாறுகளையும் ஸ்டெம் செல்கள் கொண்டு சரிசெய்யும் என்கின்றன சமீபத்திய சில மருத்துவ ஆய்வுகள்.

கருவின் உயிர்காக்கக் கூடிய இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்பம் வெற்றி அடைய வேண்டுமானால், ஒரு கருவின் வளர்ச்சியின்போது என்னென்ன உயிரியல் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பது குறித்த தெளிவான புரிதல் ஏற்பட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கருவளர்ச்சியின் தொடக்க நிலைகளில் ஏற்படும் உயிரியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் தொழில்நுட்பத்தை, ஆய்வு முறைகளை இதுவரை விஞ்ஞானிகளால் உருவாக்க முடியவில்லை.

சமீபத்தில் நேச்சர் (Nature) அறிவியல் இதழில் வெளியான, நெதர்லாந்து நாட்டில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம் (Maastricht University) மற்றும் ராயல் நெதர்லாந்து அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ் (Royal Netherlands Academy of Arts and Sciences, KNAW) ஆய்வுக் கூடங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ‘செயற்கை கரு’ தொடர்பான ஆய்வானது, கருவளர்ச்சி தொடர்பான மருத்துவத்தை புரட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வு குறித்த மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ளும் முன்பு, கருவளர்ச்சி குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம்.

பாலூட்டிகளில், ஒரு கருமுட்டையானது விந்தணுவுடன் முழுமையாக இணைந்தபின்பு சில நாட்களில் நூறு உயிரணுக்களால் ஆன பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) எனும் ஒரு உயிரணுப் பந்து உருவாகும். அதன்பின்னர், பிளாஸ்டோசிஸ்ட்டானது கருப்பையில் (Uterus) தன்னை பொருத்திக்கொள்ளும். அதனைத் தொடர்ந்து பிளாஸ்டோசிஸ்ட்டில் உள்ள கரு உயிரணுக்கள் (embryonic cells) கருவாகவும், அதிலுள்ள ட்ரோபோபிளாஸ்ட் உயிரணுக்கள் (trophoblast cells) சூல் வித்தகமாகவும் (Placenta) வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் நிகோலாஸ் ரிவ்ரான் பிளாஸ்டோசிஸ்ட்டின் உட்புற மற்றும் வெளிப்புற உயிரணுக்களை ஸ்டெம் செல்களின் உதவியுடன் இதற்கு முன்னர் உருவாக்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இரண்டையும் ஒன்றிணைக்க சமீப காலம் வரை அவரால் முடியவில்லை.

ஆனால் இந்த புதிய ஆய்வில், ட்ரோபோபிளாஸ்ட் உயிரணுக்களைக் கொண்டு பிளாஸ்டாய்டு (Blastoid) என்று அழைக்கப்படும் செயற்கை கருவை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது ரிவ்ரான் தலைமையிலான ஆய்வுக்குழு.

முக்கியமாக, இந்த பிளாஸ்டாய்டுகளை எலிகளின் கருப்பையில் பொருத்தியபோது, ஒரு இயற்கையான கரு வளர்வதைபோலவே பிளாஸ்டாய்டுகள் கருவாக வளர்ச்சி அடைந்ததும், மேலும் அவை தாய் எலியின் ரத்த நாளங்களுடன் ஒன்றுகலந்து வளர்ந்ததும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை எதிர்காலத்தில் மனிதர்களைக் கொண்டு மேற்கொள்வதன் மூலமாக, இதற்கு முன்னர் காண முடியாத, மனிதக்கரு வளர்ச்சியின் பல தொடக்கநிலை உயிரியல் நிகழ்வுகளை முழுமையாக ஆய்வு செய்ய முடியும் என்றும், மலட்டுத்தன்மையை தடுக்கும் மருந்துகள் உற்பத்தி செய்தல் மற்றும் மனித குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் ஆபத்தான மரபியல் மாற்றங்களையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர் நிகோலாஸ் ரிவ்ரான்.