வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு


வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 2:30 AM IST (Updated: 15 May 2018 5:48 PM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேரன்மாதேவி, 

வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 66) ஜோதிடர். இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற விஜயா (62). இவர் தினமும் காலையில் தனது வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் நேற்று காலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விஜயா நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விஜயா கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்கள் பறித்து சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு 

இதற்கிடையே அந்த தெருவில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி மர்மநபர்கள் பறித்து சென்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story