நாளை, நாளைமறுநாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்


நாளை, நாளைமறுநாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்
x
தினத்தந்தி 15 May 2018 8:30 PM GMT (Updated: 15 May 2018 3:34 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

நெல்லை, 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் செந்தில்குமார் (நெல்லை மாவட்டம்), ஆர்.சேகர் (தூத்துக்குடி மாவட்டம்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறிஇருப்பதாவது:–

கமல்ஹாசன் வருகை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறுக்கு வருகிறார்.

அதை தொடர்ந்து 9.15 மணி அளவில் பணகுடிக்கு வரும கமல்ஹாசனுக்கு, நெல்லை மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் கமல்ஹாசன் வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

தூத்துக்குடி மாவட்டம்

இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். காலை 10 மணிக்கு மணப்பாடுக்கு வருகை தரும் கமல்ஹாசனுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மணப்பாடு மக்களை அவர் சந்தித்து பேசுகிறார்.

11 மணிக்கு திருச்செந்தூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு காயல்பட்டினத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்களை சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

நெல்லை மாவட்டம்

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன் நெல்லைக்கு வந்து ஒரு ஓட்டலில் தங்குகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மீண்டும் மக்களை சந்திக்க புறப்படுகிறார். பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை அருகில் திறந்த வேனில் நின்று மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மேலப்பாளையம் சந்தை முக்கு, டவுன் வாகையடி முக்கு ஆகிய இடங்களிலும் கமல்ஹாசன் மக்களை சந்திக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் அவர் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மதுரை விமான நிலையத்துக்கு சென்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

எனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய, நகர, அனைத்து பொறுப்பாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டு உள்ளது.

கமல்ஹாசன் வருகை

இதற்காக கமல்ஹாசன் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் புறப்பட்டு சென்றார்.


Next Story