மாவட்ட செய்திகள்

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்ககோரி 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி + "||" + Set up a trading port in the breeze The demonstration on the 19th of the 4 MLAs jointly interviewed

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்ககோரி 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்ககோரி 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக பேட்டி
குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க கோரி நாகர்கோவிலில் வருகிற 19–ந் தேதி, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல அரசியல் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக 4 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக தெரிவித்தனர்.
நாகர்கோவில்,

எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் ஆகிய 4 பேரும் நேற்று கூட்டாக நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் எந்த பலனும் இல்லை. இதனால் குமரி மாவட்ட இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காது. ஏன் எனில் சரக்கு பெட்டக மாற்று முனையத்தில் பெரிய– பெரிய கன்டெய்னர்களை தூக்கி மாற்றும் எந்திரத்தை இயக்கக்கூடியவர்கள் அதிக திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் அங்கு பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் தான் தேவை. அப்படி பார்க்கும்போது குமரி மாவட்ட இளைஞர்களுக்கு இதன் மூலம் எந்த பயனும் இல்லை.


 மாறாக குமரி மாவட்டத்தின இயற்கை வளங்கள் பாதிக்கப்படும். சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மிகவும் அதிகமான கற்கள் தேவைப்படும். அதற்கு மலைகளை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தண்ணீருக்காக ராட்சத போர் போட வேண்டி இருக்கும். மேலும் கன்டெய்னர்களை சுமந்து செல்லும் வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்கு 6 வழிச்சாலை அமைப்பார்கள். 6 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டால் நல்லது தான். ஆனால் குமரி மாவட்டம் நிலப்பரப்பில் குறைந்த மாவட்டம். மக்கள் நெருக்கடியில் வாழ்கிறார்கள். அப்படி இருக்க 6 வழிச்சாலை வந்தால் மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் கொடுத்துவிட்டு மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் குமரி மாவட்ட மக்கள் கேட்பது வர்த்தக துறைமுகம். அதை குளச்சலில் சிறிய அளவில் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ரப்பர் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யலாம். வேலைவாய்ப்பு பெருகும்.

எனவே சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கியும், குளச்சலில் வர்த்தக துறைமுகம் வேண்டியும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வருகிற 19–ந் தேதி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேலும் ஒகி புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதி இன்னும் சென்று சேரவில்லை. எனவே நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும். அழிக்கால், பள்ளவிளை, இரையுமன்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகள் அடிக்கடி கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் காரணமாகவும் 19–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

பேட்டியின்போது சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த பார்த்தசாரதி உடனிருந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை