ஊட்டிக்கு முதல்-அமைச்சர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு


ஊட்டிக்கு முதல்-அமைச்சர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2018 4:44 AM IST (Updated: 16 May 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நடை பெறும் மலர் கண் காட்சிக்கு முதல்-அமைச்சர் வருகை தர இருப்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இதையொட்டி கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த 5-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டியில் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடந்தன. இதையடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 18-ந் தேதி 122-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டிக்கு வருகை தருகிறார்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. நடைபாதை ஓரங்களில் பல்வேறு வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் மரங்களை சுற்றிலும் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட உள்ளன. புல்வெளிகள் மற்றும் மலர் செடிகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தாவரவியல் பூங்கா அலுவலகம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை காரணமாக கீழே விழுந்த கிடந்த மரம் நேற்று துண்டு, துண்டாக வெட்டி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதையொட்டி, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் நேற்று பூங்காவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அவர் மலர் மாடங்களுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதி, மலர் மாடங்கள், சீரமைக்கப்பட்டு வரும் கண்ணாடி மாளிகை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் மேடை மற்றும் அரங்குகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து ஊட்டி போலீஸ் டி.ஐ.ஜி. இத்தாலியன் பூங்காவுக்கு சென்றார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்லும் பகுதிகளை சரியாக வைப்பது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story