திருப்பூர் பின்னலாடை துறை ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள்; ஏ.இ.பி.சி.துணை தலைவர் சக்திவேல்


திருப்பூர் பின்னலாடை துறை ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள்; ஏ.இ.பி.சி.துணை தலைவர் சக்திவேல்
x
தினத்தந்தி 15 May 2018 11:24 PM GMT (Updated: 15 May 2018 11:24 PM GMT)

திருப்பூர் பின்னலாடை துறை ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் போலி ஏஜெண்டுகளை தவிர்க்க வேண்டும் என ஏ.இ.பி.சி.துணை தலைவர் சக்திவேல் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் பின்னலாடை துறை ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் போலி ஏஜெண்டுகளை தவிர்க்க இ.சி.ஜி.சி.(எக்ஸ்போர்ட் கிரடிட் கேரண்டி கார்ப்பரேஷன்) யின் வழிகாட்டுலை பின்பற்ற வேண்டும் என்று ஏ.இ.பி.சி.துணை தலைவர் சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பின்னலாடை நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். மேலும், இந்திய வர்த்தக சந்தையில் திருப்பூரின் பங்கும் அதிக அளவில் இருந்து வருகிறது. வருகிற 2020-ம் ஆண்டிற்குள் திருப்பூர் வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக எட்டுவதில் பின்னலாடை துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதில் இருந்து தொழில்துறையினர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். டியூட்டி டிராபேக் எனப்படும் திரும்ப பெறும் வரியினத்திலும் பெரும் மாறுதல் கொண்டுவரப்பட்டது. இது ஏற்றுமதியாளர்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியது. மேலும், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரிவிகிதமும் அதிகரித்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கோரிக்கைகளை ஏற்று குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்பட்டது. இருப்பினும் பின்னலாடை தயாரிப்புக்கான எந்திரங்கள், மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகளில் வரியினங்கள் அதிகரிப்பு, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடந்த நிதியாண்டில் ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்த திருப்பூர் வர்த்தகம் இந்த நிதியாண்டில் ரூ.23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க திருப்பூரில் இருந்து ஆடைகளை வாங்கும் வெளிநாட்டு பையர்கள், பொருட்களை பெற்ற பின்னர் பல்வேறு காரணங்கள் கூறி அதற்கான தொகையை செலுத்தாமல் திருப்பூர் வர்த்தகர்களை ஏமாற்றி வருவதாகவும், இதனால் பல ஏற்றுமதியாளர்கள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் சின்னக்கரையை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆடைகளை பெற்றுக்கொண்ட அந்த நாட்டு பையர் பல்வேறு காரணங்களை கூறி அதற்கான பணத்தை அனுப்பாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அந்த ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒருவருடத்தில் கடன் தொல்லை மற்றும் ஏமாற்றும் பையர்களிடம் இருந்து சரியாக பணம் வராதது உள்ளிட்ட பிரச்சினைகளால் பல ஏற்றுமதியாளர்கள் இறந்துள்ளனர். இதை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும், மேலும் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஏற்றுமதியாளர்களும், ஏற்றுமதியாளர்கள் சங்கமும் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் ஏ.இ.பி.சி.(ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில்) துணை தலைவர் சக்திவேல் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திருப்பூரில் ஏற்றுமதியாளர் சரவணனின் இறப்பு அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பையிங் ஏஜெண்டுகளே. திருப்பூரில் நூற்றுக்கணக்கான பையிங் ஏஜெண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏஜெண்டுகளில் ஒருசில நிறுவனங்கள் ஏற்றுமதியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதை ஏற்றுமதியாளர்கள் சங்கமோ அல்லது வங்கியாளர்களோ அடையாளம் கண்டு, அது குறித்த எச்சரிக்கையை அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதற்காக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுபோக எந்த ஏற்றுமதியாளர்களாக இருந்தாலும், பையர்களிடம் இருந்து ஆர்டர்களை எடுக்கும் போது, அந்த குறிப்பிட்ட பையர் எப்படிப்பட்டவர்?, பையிங் ஏஜெண்ட் எப்படிப்பட்டவர்? என்பதை நன்கு ஆராய்ந்து ஆர்டர்களை எடுக்க வேண்டும்.

இதில் ஏற்றுமதியாளர்களுக்கு உறுதுணையாக இ.சி.ஜி.சி. எனப்படும் எக்ஸ்போர்ட் கிரடிட் கேரண்டி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு ஆர்டர்கள் எடுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இந்த நிறுவனத்திடம் சம்பந்தப்பட்ட பையரின் பெயரை கொடுத்து, இந்த பையர் சரியான நபர் தானா?, வங்கியில் இவருடைய பணபரிவர்த்தனை சரியாக இருக்கிறதா?, இவரை நம்பி குறிப்பிட்ட தொகைக்கு வர்த்தகம் செய்யலாமா? என்று விசாரிக்க வேண்டும். அப்போது அந்த நிறுவனம் குறிப்பிட்ட நாடுகளிடமும், அங்குள்ள வங்கிகளிடமும் விசாரித்து அது குறித்த முழு தகவல்களையும் கொடுத்து விடுவார்கள். மேலும், சில பையர்கள் அளவுக்கு மீறிய தொகையில் வர்த்தகம் செய்ய கேட்டாலும், இதுகுறித்தும் இ.சி.ஜி.சி.யில் ஆலோசனை கேட்டால், அந்த பையர்களுடன் எவ்வளவு ரூபாய் வரை மட்டுமே வர்த்தகம் செய்யலாம் என்று அந்த நிறுவனம் கூறிவிடும். அதற்கு ஏற்ப வர்த்தகத்தை செய்து கொள்ளலாம்.

இந்த இ.சி.ஜி.சி.யின் வழிகாட்டுதலின் படியும், ஏற்றுமதிக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட அம்சங்களையும் ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் இதுபோன்ற இறப்புகள், இழப்புகளை, ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம். மேலும், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் ஆர்ப்பிட்ரேஷன் கவுன்சில் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் சம்பந்தப்பட்ட பையிங் ஏஜெண்டுகளையும், பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களையும் வரவழைத்து அவர்களுக்கான தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பையர்களிடம் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு பணத்தை பெற்றுத்தராவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பையிங் ஏஜெண்டுகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கலாம். ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் பெறுவது என்பது மிகவும் முக்கியம் தான். அதே நேரம் அவர்களை பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வது அதை விட மிக முக்கியமாக உள்ளது. அதுபோல பையிங் ஏஜென்சிகளை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து ஏற்றுமதியாளர்களும் இவற்றை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஏற்றுமதியாளர்களின் மரணங்களை பாடமாக எடுத்து கொள்ள வேண்டும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உள்ள ஆர்ப்பிட்ரேசன் கவுன்சில் இந்த சம்பவங்களை மிகவும் முக்கியமாக எடுத்து கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களை காப்பாற்ற வேண்டும். ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளுக்கு 150 நாட்களில் இருந்து 300 நாட்களுக்குள் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது ஆர்.பி.ஐ. யின் சட்டவிதியாக இருந்து வருகிறது. இதன்படி ஆர்ப்பிட்ரேசன் கவுன்சில் முடிவு எடுத்து சம்பந்தப்பட்ட பையருக்கு அழுத்தம் கொடுத்து கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் தான் ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை பெருக்குவதுடன், ஏற்றுமதியையும் உறுதியுடன் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story