மாவட்ட செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் + "||" + At the primary health center Additional doctors should be appointed

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த எழிச்சூரில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எழிச்சூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, சென்னக்குப்பம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.


தாய் சேய் நலம், பொது மருத்துவம், மலேரியா, தொழுநோய், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் கர்பிணிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சோமங்கலம், படப்பை, மாங்காடு, குன்றத்தூர், கொளப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை சுகாதார நிலையமாக உள்ள ஏனாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் ஆடு, மாடுகள், நாய்கள் போன்றவை சுகாதார நிலையத்திற்குள்ளேயே சுற்றி திரிகிறது.

சுகாதார நிலையத்திற்கு மக்கள் வந்து செல்லும் வழியில் ஆடு, மாடுகள் படுத்து கொள்கிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே செவிலியர் பயிற்சி கட்டிடம், மற்றும் மருத்துவர், ஊழியர்கள் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் செயல்பாடின்றி பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு பாம்புகள் சுற்றி திரிகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரவு நேரங்களில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலில் உள்ள கதவுகள் மூட முடியாத நிலையில் உள்ளதாகவும், சுகாதார நிலையத்தில் காவலர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. ஆகவே உடனடியாக கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

சுற்றுச்சுவர் அமைத்து போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழைய கட்டிடங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.