தேனியில் பலத்த காற்றுடன் மழை


தேனியில் பலத்த காற்றுடன் மழை
x
தினத்தந்தி 16 May 2018 5:14 AM IST (Updated: 16 May 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின்கம்பிகள் அறுந்து பஸ் மீது விழுந்தது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 58 மில்லிமீட்டர் மழை பெய்தது. கூடலூரில் 19.4 மில்லிமீட்டரும், வைகை அணையில் 0.4 மில்லிமீட்டரும், உத்தமபாளையத்தில் 18.6 மில்லிமீட்டரும், வீரபாண்டியில் 6 மில்லிமீட்டரும், மஞ்சளாறு அணையில் 9 மில்லிமீட்டரும், சண்முகாநதி அணையில் 16.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

நேற்றும் மாலை 5.30 மணியளவில் தேனியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலமான காற்று வீசியதால் சாலையோரம் இருந்த ஏராளமான விளம்பர பேனர்கள் கிழிந்தன. தேனி- கம்பம் சாலையில் வணிக நிறுவனங்களின் கட்டிடங்களின் மேல் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான விளம்பர பேனர்களும் காற்றில் கிழிந்து பறந்தன.

ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. கம்பம் சாலை, மதுரை சாலையில் குட்டை போல் மழைநீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம் செய்தனர். இதனால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேரு சிலை சிக்னலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங் கள் அணிவகுத்து நின்றன.

தேனி புறவழிச்சாலையில் பலத்த காற்றினால் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் திடீரென சாய்ந்தன. 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. மின் கம்பங்கள் சாய்ந்த காரணத்தினால் மின் கம்பிகள் அறுந்து பஸ் மேற்கூரை மீது விழுந்தது. அப்போது மின் துண்டிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்ததை தொடர்ந்து மின் ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேனி-பெரியகுளம் சாலையில் சுக்குவாடன்பட்டியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஒரு மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் நகரில் ஆங்காங்கே சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.

போடி, சின்னமனூர் பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் சாரல் மழை பெய்தது. உத்தமபாளையத்தில் மிதமான மழை பெய்தது. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story