மாவட்ட செய்திகள்

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: புதுமாப்பிள்ளை கைது + "||" + New groom arrested

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: புதுமாப்பிள்ளை கைது

கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: புதுமாப்பிள்ளை கைது
கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக, புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு முன் உல்லாசத்துக்கு மறுத்ததால் கற்பழித்து கொன்றதாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கு சொந்தமான விளை நிலம் அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் காலை அந்த விளை நிலத்தில் உள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


அதன் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போன பெண்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.

இதில் அந்த இளம்பெண் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் அவர் கடந்த 13-ந்தேதி முதல் காணாமல் போனதாக இளம்பெண்ணின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்து இருந்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த இளம்பெண்ணுக்கும் நல்லூர் பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார்(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 20-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தான் அவர் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது விஜயகுமாருடன் இளம்பெண் மோட்டார் சைக்கிளில் சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நல்லூர்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் இளம்பெண்ணை இருந்தை கிராமத்தில் உள்ள விளை நிலத்துக்கு அழைத்து சென்று கற்பழித்து கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இளம்பெண்ணை பெண் பார்க்க சென்றேன். பின்னர் இருவீட்டிலும் ஜாதகம் பார்த்தனர். இதில் ஜாதகம் பொருந்தாததால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இருப்பினும் நான் தினசரி இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தேன். அப்போது நான் அவரை காதலிப்பதாக கூறினேன். அவரும் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இளம்பெண் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளிக்கு சென்றேன். பின்னர் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி அழைத்தேன். அவரும் உடனே வந்தார். பின்னர் நாங்கள் இருவரும் வயல்வெளியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்தோம். இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோரிடம் கூறினர். பின்னர் அவரது பெற்றோர் எனக்கும் அவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இளம்பெண்ணுக்கு புதிதாக செல்போன் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்தேன். இதையடுத்து அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இருப்பினும் அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் கடந்த 13-ந் தேதி இரவு 11 மணி அளவில் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, தனிமையில் பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். அவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இதையடுத்து இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அங்கு உல்லாசமாக இருக்க அழைத்தேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவரது கன்னத்தில் அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் நான் மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணை கற்பழித்தேன்.

இதையடுத்து அருகில் உள்ள கிணற்றில் தள்ளினேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தொடர்ந்து நான் ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.