வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2018 10:00 PM GMT (Updated: 16 May 2018 7:43 PM GMT)

வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிள்ளது.

மதுரை,

மதுரை மீனாம்பாள்புரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது மகன் உதயகுமார் பி.இ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு, 2 வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் எனது வீட்டின் அருகில் குடியிருந்து வரும் கிருஷ்ணசாமி, சென்னையில் உள்ள ரேணுகா என்பவர் மூலமாக எனது மகனுக்கு தேசிய வங்கி ஒன்றில் அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி, ரேணுகாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் பேச்சை நம்பி, எனது மகன் சவுதி அரேபியாவில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பினார்.

அதையடுத்து வங்கி அதிகாரி வேலைக்காக பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கி கணக்கின் மூலமாகவும் கிருஷ்ணசாமியும், ரேணுகாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். ஆனால் வங்கியில் வேலை கிடைக்கவில்லை. அதன்பின் தான் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. எங்களை போல ஏராளமானோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எனது ரூ.15 லட்சத்தை திருப்பி தரும்படி தொடர்ந்து கேட்டேன். அதன்படி ரூ.10 லட்சத்தை வங்கிக்கணக்கின் மூலம் செலுத்தி விட்டனர். ஆனால் மீதமுள்ள ரூ.5 லட்சத்தை தரும்படி கேட்டால் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் மனுதாரரின் மனு மீது உரிய விசாரணை நடத்தி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story