மானாமதுரை அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


மானாமதுரை அருகே மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 May 2018 10:15 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

மானாமதுரையில் அரசு மணல் குவாரி அமைக்கும் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரையை அடுத்த சிறுகுடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. நீதிமன்ற தடைக்கு பிறகு மணல் குவாரி மூடப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் திருச்சியில் இருந்தும் வரும் மணலையும், திருட்டு மணலையும் நம்பி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொதுப்பணித்துறை சார்பில் மானாமதுரை அருகே செய்களத்தூர் மற்றும் வாகுடி பகுதிகளில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழல் தடையின்மை சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இடைக்காட்டூரில் கிணறு அமைத்து, அதில் இருந்து சிவகங்கைக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதில் போதுமான தண்ணீர் இல்லை என கூறி கூடுதலாக கிணறு அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்தபோது, இடைக்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் குவாரி அமைத்தால் இடைக்காட்டூர் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை கூறுகையில், ஏற்கனவே மானாமதுரை பகுதியில் செயல்பட்டு வந்த குவாரிகளால் ஆறு பள்ளமாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மேடாகவும் மாறியதால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பணம் செலவு செய்து தண்ணீர் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது செய்களத்தூர், வாகுடி பகுதிகளில் குவாரி அமைத்தால் மிளகனூர், கட்டிகுளம், குவளைவேலி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே குவாரி அமைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.


Next Story