தமிழக அரசின் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது பி.ஆர்.பாண்டியன் பேட்டி


தமிழக அரசின் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்து தமிழக அரசின் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ந் தேதி தாக்கல் செய்தது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு நடுவர் மன்ற தீர்ப்பை முடக்கும் வகையில் தமிழக நலனுக்கு எதிராகவும் உள்ளது.

குறிப்பாக அணைகளின் நிர்வாக அதிகாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், அமைப்பின் நிர்வாக அலுவலகம் பெங்களூரு நகரத்தில் அமைக்கப்படும் எனவும், அமைப்பில் மாநிலங்களுக்குள் ஒத்த கருத்து ஏற்படாவிட்டால் மத்திய அரசை அணுக வேண்டும் என்றும், மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும் செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தும், கோர்ட்டு தான் விரும்பும் பெயரை வைத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதோடு, அணைகளின் நிர்வாக அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என கூறியிருந்தது. இந்த நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவிற்கு ஆதரவானதுமாகும். மேலும் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும். கோர்ட்டை அவமதிப்பதோடு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முடக்கும் செயலும் ஆகும் என தெரிவித்தோம்.

இதுகுறித்து தமிழக அரசு வக்கீல்கள் இன்று(அதாவது நேற்று) சுப்ரீம் கோர்ட்டில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீப்பை பின்பற்றி முழுஅதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், நிர்வாக அலுவலகம் டெல்லியில் அமைக்கவும், மத்திய அரசு இறுதி முடிவு எடுப்பதை தடுத்திட முன்வைத்த திருத்தங்களை நீதிபதிகள் ஏற்று அதனை திருத்தம் செய்து புதிய செயல் திட்டம் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். வக்கீல்களுக்கும், முதல்-அமைச்சர் உள்ளிட்ட தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் அணைகளின் பராமரிப்பு மற்றும் புதிய அணைகள் கட்டுவதானால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், மேலாண்மை வாரிய அனுமதியை பெற வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள அறிவுரையை உத்தரவாக பெற வேண்டும்.

மேற்கண்ட திருத்தங்களோடு இன்று(வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் அறிக்கையை உடன் மத்திய அரசிதழில் வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்து வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கும் வகையில் தண்ணீரை பெற்றுத்தர கோர்ட்டில் வலியுறுத்தி மத்திய அரசு ஜூலை மாதம் வரை காலம் கடத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story