தவறான ஆபரேஷனால் உடல்நிலை பாதிப்பு: கருணை கொலை செய்யக்கோரி மகனுடன் பெண் போராட்டம்


தவறான ஆபரேஷனால் உடல்நிலை பாதிப்பு: கருணை கொலை செய்யக்கோரி மகனுடன் பெண் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

தவறான ஆபரேஷனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும், கருணை கொலை செய்யக்கோரி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகனுடன் பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஒன்றியம் கண்தீனதயாளன் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அகிலா(வயது36). இத்தம்பதிக்கு 13 வயதில் ஜெயசீலன் என்ற மகன் உள்ளார். அவர் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

அதைத்தொடர்ந்து அகிலா, தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு அகிலா தனது மகன் ஜெயசீலன் மற்றும் உறவினர்கள் சிலருடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். கையில் மனு வைத்திருந்த அவர், திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் அனிதாவை பார்க்க வந்ததாக கூறினார்.

அந்த வேளையில் டீன் வேறு ஒரு கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். இதனால், டீனை சந்தித்து மனு கொடுக்கும் வரை அசையமாட்டேன் என்று கூறிய அகிலா, உறவினர்களுடன் ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அகிலா கொடுக்க இருந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த 26.8.2017 அன்று எனக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பபை பிரச்சினை தொடர்பாக ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த ஆபரேஷனுக்கு பிறகு எனது வயிறு வீக்கம் எடுத்தது. தொடர்ந்து சிறுநீர் கழிந்து கொண்டே இருக்கிறது. டாக்டர்களின் தவறான ஆபரேஷனால் தான் பிரச்சினை என தெரிந்தது. சில தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று கேட்டு பார்த்தேன். அவர்களும் அதேதான் தெரிவித்தனர்.

பின்னர் மீண்டும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கேட்டபோது, உடனடியாக மாற்று ஆபரேஷன் செய்ய முடியாது. 6 மாதம் கழித்துதான் அடுத்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று கூறி விட்டனர். ஆனால் 6 மாதங்களை கடந்தும் எவ்வித முயற்சியும் டாக்டர்கள் மேற்கொள்ளவில்லை. என்னால் தற்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.

இது தொடர்பாக நியாயம் கேட்டு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் மனு கொடுத்தேன். எனது உடல் நிலை காரணமாக, மகனும் சரிவர பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டார். இதனால் பிழைக்க வழியின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன்.

எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் என்னையும், எனது மகனையும் கருணை கொலை செய்யுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அவரிடம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பிலும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் அவர் டீனை சந்திக்கும்வரை செல்லமாட்டேன் என கூறினார். உங்கள் கோரிக்கை மனுவை டீனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மகன் மற்றும் உறவினர்களுடன் அகிலா அங்கிருந்து சென்றார். 

Next Story