குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2018 4:15 AM IST (Updated: 17 May 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் காருகுடி கிராமத்தில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை சரி செய்யுமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்திஅடைந்த கிராம பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காருகுடி கிராமத்தின் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற இரண்டு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கிராம பொதுமக்கள் சிலர் காருகுடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பூட்டு போட்டனர். இது குறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒன்றிய ஆணையர்கள் பெரியசாமி, கண்ணன் மற்றும் தா.பேட்டை போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.


Next Story