பள்ளிப்பட்டு ஜமாபந்தியில் பரபரப்பு பட்டா மாற்றம் செய்யாததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
பட்டா மாற்றம் செய்யாமல் நாட்களை கடத்தியதால் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பள்ளிப்பட்டு ஜமாபந்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஜமாபந்தி கடந்த 2–ந்தேதி முதல் தாலுகா அலுவலகத்தில் நடந்து வந்தது. கடைசி நாள் ஜமாபந்தி நேற்று நடந்தது. நிகழ்ச்சி இறுதியில் விவசாயிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி காலையில் நடந்த ஜமாபந்தியில் கலந்து கொள்ளாமல் மாலையில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக தெரிவித்தார்.
இதனால் காலையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட சப்–கலெக்டர் (தேர்தல் பணி) மணிலா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனது தாத்தா செங்கல்வராயன் கொடுத்த பட்டா மாற்றம் என்ன ஆனது என்று கேட்டார். அந்த மனு மீது விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் கையில் கொண்டு வந்த மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றிக்கொண்டு ஜமாபந்தி அதிகாரிகள் கண் முன்னால் தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரும், வருவாய் துறை அலுவலர்களும் அவரை மடக்கி தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர்.
பள்ளிப்பட்டு போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். இதில் அந்த வாலிபர் பெயர் வினோ (வயது 26) என்பதும், அவர் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் காலனியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் என்பதும் தெரியவந்தது.
இவரது தாத்தா செங்கல்வராயன் என்பவருக்கு சொந்தமான 5.2 சென்ட் நிலம் பக்கத்து நிலத்து உரிமையாளர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றப்பட்டதை கணினி திருத்தம் செய்து பட்டா வழங்க கடந்த 5 ஆண்டு காலமாக கேட்டும் பயனில்லை என்று தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியிலும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அவரை போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.