மதுரவாயல் பறக்கும் சாலை பணியை தொடங்க கோரி தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டம்


மதுரவாயல் பறக்கும் சாலை பணியை தொடங்க கோரி தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2018 4:15 AM IST (Updated: 17 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயல் பறக்கும் சாலை பணியை விரைவில் தொடங்க கோரி மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்ச்சி அமைப்பினர் மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளில் வர்ணம் பூசும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னையில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை கனரக வாகனங்களில் எளிதில் கொண்டு செல்லவும் கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 2011–ல் இந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த பறக்கும் சாலை பணிக்காக மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் அறுத்து எடுத்து சென்று விடுகின்றனர். மேலும் வெயில், மழையால் அந்த தூண்களில் உள்ள கம்பிகள் துருபிடித்து காணப்படுகிறது.

எனவே கிடப்பில் போடப்பட்டு உள்ள மதுரவாயல் பறக்கும் சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். தூண்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்ச்சி அமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் 30–க்கும் மேற்பட்டோர் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்காக மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுவே மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கப்பட்டன. மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

தூண்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு கம்பிகள் வெயில், மழையில் துருப்பிடித்து சேதமடைந்து வருகிறது. மீண்டும் அதில் மேம்பாலம் அமைத்தால் பாலம் பலவீனமாகிவிடும். மேலும் சில இடங்களில் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து எடுத்து திருடிச்சென்று உள்ளனர்.

எனவே பறக்கும் சாலை திட்டத்துக்கான மேம்பாலம் அமைக்கும் பணியை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும். துருபிடித்து வரும் தூண்களில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு வர்ணம் அடித்து தற்காலிகமாக இரும்பு கம்பிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

மதுரவாயல் பறக்கும் சாலை பணியை மீண்டும் தொடங்க கோரி மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கவர்னரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மேம்பால பணியை உடனடியாக தொடங்காவிட்டால் மத்திய மந்திரி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story