டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 4:30 AM IST (Updated: 17 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கானத்தூரில் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ். பல் டாக்டரான இவர், சோழிங்கநல்லூர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 2–ந் தேதி டாக்டர் ஹரீசின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம ஆசாமி ஒருவர், ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணத்தை தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக கூறி ரூ.50 ஆயிரம் வரை பேரம் பேசுகிறார்.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி டாக்டர் ஹரீஸ் கானத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு போலீஸ் துணை கமி‌ஷனர் ரோகித்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர்கள் சுப்புராயன், சீனிவாசன் தலைமையில் கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், கவுதமன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் டாக்டர் ஹரீசிடம் பேசிய மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த செல்போன் டவர், சென்னையை அடுத்த அஸ்தினாபுரத்தை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் மாறுவேடங்களில் சென்று அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், ஸ்ரீவல்லிபுத்தூரைச் சேர்ந்த முருகன்(வயது 24) என்பதும், அஸ்தினாபுரத்தில் தங்கி சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு எல்.எல்.பி. படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவர், தன்னுடன் தொழிற்கல்வி படித்து விட்டு தற்போது கார் சர்வீஸ் பணி செய்து வரும் குரோம்பேட்டையை சேர்ந்த தனது நண்பர் பாலாஜி(24) என்பவருடன் சேர்ந்து சேலையூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட டாக்டர்களை மிரட்டி பணத்தை வாங்கி, அதில் உல்லாசமாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து முருகன், அவருடைய நண்பர் பாலாஜி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story