முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையொட்டி கட்சி பிரமுகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் திலாசுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி வீடு உள்ளது. இந்த தெருவில் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்தநிலையில் சென்னை எழும்பூர் காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
உடனே சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார், புதுவை காவல் கட்டுபாட்டுக்கு அறைக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஐ.ஆர்.சி. மோகன், ரச்சனாசிங், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாய்கள் வீரா, சிம்பா ஆகியவை கொண்டு வரப்பட்டு ரங்கசாமி வசித்து வரும் வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அந்த தெரு முழுவதும் அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் சோதனைக்குள்ளாகின. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது மிரட்டல் என்று போலீசார் முடிவு செய்தனர்.
ரங்கசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் ரங்கசாமியின் வீட்டின் முன்பு திரண்டனர். எம்.எல்.ஏ.க்கள் ஆசோக் ஆனந்த், என்.எஸ்.ஜெ.ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், நேரு மற்றும் முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் திரண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.