பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு மாவட்டத்தில் 83.35 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு மாவட்டத்தில் 83.35 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 8:43 PM GMT)

பிளஸ்-2 தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 83.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

விழுப்புரம்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 39 ஆயிரத்து 539 மாணவ-மாணவிகளில் 32 ஆயிரத்து 955 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.35 சதவீத தேர்ச்சியாகும்.

கல்வி மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 160 மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 691 மாணவிகளில் 5 ஆயிரத்து 307 மாணவர்களும், 6 ஆயிரத்து 781 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 81.04 சதவீத தேர்ச்சி ஆகும்.

விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 630 மாணவர்களும், 6 ஆயிரத்து 307 மாணவிகளும் ஆக மொத்தம் 11 ஆயிரத்து 937 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 4 ஆயிரத்து 208 மாணவர்களும், 5 ஆயிரத்து 488 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 696 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 81.23 ஆகும்.

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 601 மாணவர்களும், 6 ஆயிரத்து 150 மாணவிகளும் ஆக மொத்தம் 12 ஆயிரத்து 751 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 5 ஆயிரத்து 614 மாணவர்களும், 5 ஆயிரத்து 557 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 171 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87.61 ஆகும்.

முந்தைய கல்வி ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 86.36 ஆக இருந்தது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதமானது 83.35 ஆக குறைந்து உள்ளது. இது முந்தைய கல்வி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.01 சதவீதம் குறைவாகும். இதனால் மாநில தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 1 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.01 சதவீதம் குறைந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story