மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2018 10:30 PM GMT (Updated: 16 May 2018 9:13 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 95.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்து உள்ளது. இருப்பினும் மாநில அளவிலான தேர்ச்சியில் நாமக்கல் மாவட்டம் 5-வது இடத்தை தக்க வைத்து உள்ளது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த தேர்வு முடிவுகள் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அந்தந்த பள்ளிகளிலும் விளம்பர பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 343 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். இவர்களில் 25 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.72 ஆகும்.

மாணவர்களை பொறுத்தவரையில் 13 ஆயிரத்து 25 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 312 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.53 ஆகும். மாணவிகளை பொறுத்தவரையில் 13 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 312 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.88 ஆகும்.

தேர்ச்சி சதவீதம் குறைவு

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 96.41 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக 0.69 சதவீதம் குறைந்து உள்ளது.

அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 619 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 739 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.85 ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.62 ஆக இருந்தது. இந்த ஆண்டு 1.77 சதவீதம் குறைந்து உள்ளது.

5-வது இடத்தை தக்க வைத்தது

மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டும் அதே இடத்தை தக்க வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story