பெண்ணை கேலி செய்த தகராறில் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 2 வாலிபர்கள் கைது


பெண்ணை கேலி செய்த தகராறில் வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 17 May 2018 4:30 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே பெண்ணை கேலி, கிண்டல் செய்த தகராறில் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்கச்சென்றனர். அங்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சோழசிராமணி பச்சாம்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது 21), அதே ஊரைச்சேர்ந்த மூர்த்தி மகன் மணிகண்டன் (21) ஆகிய 2 பேரும் ஒரு வேனில் அந்த வழியாக வந்தனர். இருவரும் கிணற்றில் கல் வெட்டும் கூலித்தொழிலாளர்கள்.

தாய், மகள் அருகே வேன் வந்ததும் 2 பெண்களையும் ரமேசும், மணிகண்டனும் கேலி, கிண்டல் செய்தனர். தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர். பின்னர் அங்கிருந்து ரமேசும், மணிகண்டனும் சென்று விட்டனர். தாயும், மகளும் வீடு திரும்பிய பின்னர் அந்த பெண் தனது கணவரிடம் இதுபற்றி கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவரும், அதே ஊரைச்சேர்ந்த மற்றும் சிலரும் மோட்டார்சைக்கிளில் விரைந்து சென்றனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த வேனை வழிமறித்து அதில் இருந்த ரமேசையும், மணிகண்டனையும் கண்டித்து அனுப்பினர்.

இதன்பின்னர் இரவு 9 மணியளவில் ரமேசும், மணிகண்டனும் மோட்டார்சைக்கிளில் சித்தம்பூண்டி பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கிணற்றில் வெடிவைக்க பயன்படுத்தும் மருந்தால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வைத்திருந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த வெடிகுண்டை அந்த பெண்ணின் வீட்டின் மீது வீசினர். ஆனால் அந்த வெடிகுண்டு குறிதவறி அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே உள்ள மற்றொருவர் வீட்டின் மீது விழுந்து வெடித்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதை கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ரமேசும், மணிகண்டனும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசையும், மணிகண்டனையும் கைதுசெய்தனர். 

Next Story