ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றும் வரலாறு மாறுகிறதா?


ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றும் வரலாறு மாறுகிறதா?
x
தினத்தந்தி 16 May 2018 9:27 PM GMT (Updated: 16 May 2018 9:27 PM GMT)

ஆட்சியை தீர்மானிக்கும் தொகுதிகளான ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தொகுதிகளான ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்றும் ஆட்சியை அமைக்க முடியாமல் வரலாறு மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தீர்மானிக்கும் தொகுதிகளாக கதக் மாவட்டத்தில் உள்ள ரோன், நரகுந்து தொகுதிகள் இருந்து வருகிறது. அந்த 2 தொகுதிகளிலும் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ?, அந்த கட்சியே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்து வருகிறது. அதன்படி, 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ரோன் மற்றும் நரகுந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

1957-ம் ஆண்டு முதல் கடந்த 2013-ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ரோன், நரகுந்து தொகுதிகளில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ அந்த கட்சியே மாநிலத்தில் ஆட்சியில் இருந்ததாக வரலாறு உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜி.எஸ்.பட்டீல், பி.ஆர்.யவகல் ஆகிய 2 பேரும் ரோன், நரகுந்து தொகுதியில் வெற்றி பெற்றார்கள். காங்கிரஸ் 132 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது.

அதே நேரத்தில் ரோன், நரகுந்து தொகுதிகளில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். ஒரு முறை கூட ரோனில் ஒரு கட்சியும், நரகுந்துவில் மற்றொரு கட்சியும் வெற்றி பெற்றதில்லை. நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ரோன் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட கலகப்பா பண்டி 83 ஆயிரத்து 735 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டீல் குருடாதகவுடா 76 ஆயிரத்து 401 வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்துள்ளார்.

அதுபோல, நரகுந்து தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சந்திரகாந்த கவுடா 73 ஆயிரத்து 45 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பசவராட்டி யவகல் 65 ஆயிரத்து 66 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றிருப்பதுடன், ஒட்டு மொத்தமாக 104 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனால் பா.ஜனதாவே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசும், 38 தொகுதிகளை கைப்பற்றியுள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க முடிவு செய்துள்ளன.

இதனால் ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றும், கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளதா?, அந்த வரலாறு மாறுகிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story