பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர் - எம்.பி.பட்டீல்


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர் - எம்.பி.பட்டீல்
x
தினத்தந்தி 16 May 2018 9:34 PM GMT (Updated: 16 May 2018 9:34 PM GMT)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர் என்று எம்.பி.பட்டீல் கூறினார்.


பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்ததும் எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் எங்களது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதனால் எங்களது கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா திட்டமிட்டு வருகிறது. இந்த முறை அவர்களது திட்டம் பலிக்காது. அதே நேரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதாவை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜனதாவினர் கனவு காண வேண்டாம். இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story