கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி ஏன்? - சித்தராமையா செய்த இரண்டு தவறுகள்...!


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி ஏன்? - சித்தராமையா செய்த இரண்டு தவறுகள்...!
x
தினத்தந்தி 16 May 2018 9:54 PM GMT (Updated: 16 May 2018 9:54 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி ஏன்?என கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் எதிர்ப்பு அலை இல்லாதபோதும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தராமையா செய்த 2 தவறுகள் தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சித்தராமையா ஆணித்தரமாக கூறினார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய அளவில் ஊழல் புகார்கள் எழவில்லை. அன்ன பாக்ய, ஷீரபாக்ய உள்பட பல்வேறு பிரபலமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்களிடையே இந்த ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்றும் கூறப்பட்டது.

இதனால் கர்நாடகத்தில் காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்தது. பெரிய அளவில் சிரமப்பட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தினார். எப்படியாவது காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றினார். ஆயினும் தேர்தலுக்கு முன்பு வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளில், ஆளும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறின.

தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்து கணிப்புகளில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டன. இரண்டு கருத்து கணிப்புகள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவித்தன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதில், காங்கிரஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 78 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.

சமூகநீதி குறித்து மிக அதிகமாக பேசி வந்த முதல்-மந்திரி சித்தராமையா, தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரி தொகுதியில் படுதோல்வி அடைந்துள்ளார். இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் நீடித்து நிலையான ஆட்சியை வழங்கியது. 5 ஆண்டு பதவி காலத்தை சித்தராமையா எந்த சிக்கலும் இன்றி வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். 5 ஆண்டுகளும் ஆட்சியில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை. ரெசார்ட் அரசியல் நடக்கவில்லை.

இதனால் மக்களின் மனநிலை காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ் தன்வசம் வைத்திருந்த 122 இடங்களில் 78 தொகுதிகளை மட்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளை பா.ஜனதாவிடம் பறிகொடுத்துவிட்டது. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சியும் இப்போது 2 தொகுதிகளை பறிகொடுத்து 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று திருப்தி அடைந்துள்ளது.

40 தொகுதிகளை வைத்திருந்த பா.ஜனதா, 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது கடந்த தேர்தலைவிட கூடுதலாக 64 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லாதபோதும், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பா.ஜனதாவின் கோட்டையாக உள்ள லிங்காயத் ஓட்டுகளை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்சி காலம் முடிவும் தருவாயில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவை கர்நாடக அரசு எடுத்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

லிங்காயத் சமூகத்தில் ஒரு பிரிவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அதன்படி அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக சித்தராமையா அரசு சொன்னது. இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சித்தராமையா 2 தொகுதியிலும், அவரது மகன் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டனர். பல மந்திரிகள் மற்றும் மகன்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த நிலையில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவை பா.ஜனதா ஏற்கவில்லை. தனது கோட்டையில் காங்கிரஸ் கை வைத்துவிட்டதாக கருதி சித்தராமையா மீது பா.ஜனதா கடும் ஆத்திரம் அடைந்தது. இதையே முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, தனது பிரசாரம் முழுவதிலும் லிங்காயத் விவகாரத்தை முன்வைத்து பேசினார்.

அரசியல் ஆதாயத்திற்காக லிங்காயத் சமூகத்தை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் மீதும், சித்தராமையா மீதும் மோடி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். சித்தராமையாவை 2+1 என்றும், மந்திரிகளை 1+1 என்றும் தேர்தல் போட்டி குறித்து மறைமுகமாக சாடி பேசினார். மேலும் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்வதாகவும், சித்தராமையா மற்றும் அவரது மகன் 3 தொகுதியில் போட்டியிடுவதையும், சில மந்திரிகள் மற்றும் மகன்கள் போட்டியிடுவதையும் மோடி கடுமையாக விமர்சித்தார்.

பா.ஜனதா தேசிய தேசிய தலைவர் அமித்ஷாவும் இதே கருத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார். மோடி மற்றும் அமித்ஷாவின் இந்த பிரசாரம் மக்களிடையே எடுபட்டுவிட்டதாக அதாவது பா.ஜனதாவுக்கு ஒரு ஆதரவான நிலையை ஏற்படுத்தியதாக இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்து மோடி மேற்கொண்ட பிரசாரம் மக்களிடையே காங்கிரசுக்கு எதிராக திருப்பிவிட்டுவிட்டது என்பது இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்படுகிறது. ஏனென்றால் லிங்காயத் மக்கள் அதிகமாக வசிக்கும் வட கர்நாடகத்தில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த 2 விஷயங்கள் தான் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

Next Story