பின்வாசல் வழியாக, முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் - மந்திரி ராமலிங்கரெட்டி


பின்வாசல் வழியாக, முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் - மந்திரி ராமலிங்கரெட்டி
x
தினத்தந்தி 16 May 2018 10:45 PM GMT (Updated: 16 May 2018 10:41 PM GMT)

தனி பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பின்வாசல் வழியாக முதல்-மந்திரி பதவிக்கு வர எடியூரப்பா துடிக்கிறார் என்று மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் எந்தவொரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. குமாரசாமி தான் முதல்-மந்திரி என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில எம்.எல்.ஏ.க்களால் கூட்டத்திற்கு வர முடியாமல் போனது. ஒருவருக்கு உடல் நலக்குறைவு, அதனால் கூட்டத்திற்கு வரவில்லை.

ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜனதாவினர் ‘ஆபரேசன் தாமரை‘ மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்சிக்குள் இழுத்தார்கள். இந்த முறை அப்படி நடக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியை ஆட்சி அமைக்க கவர்னர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். ஒரு வேளை கவர்னர் அழைப்பு விடுவிக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் ஒரு கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கான உதாரணங்கள் உள்ளன. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்திருந்ததை பா.ஜனதாவினர் மறந்து விடக்கூடாது.

பா.ஜனதாவினர் அந்த மாநிலங்களில் எந்த வழியை பின்பற்றினார்களோ, அதனை தான் நாங்கள் தற்போது கர்நாடகத்தில் பின்பற்றுகிறோம். தனி பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பின் வாசல் வழியாக முதல்-மந்திரி பதவிக்கு வருவதற்காக எடியூரப்பா துடிக்கிறார். தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கக்கூடாது. மற்ற மாநிலங்களில் கவர்னர்கள் எடுத்த முடிவுகளை ஆராய்ந்து கர்நாடக கவர்னரும் சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

Next Story