மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் பரபரப்பு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம் + "||" + villupuram Tasmac club's members suddenly struggle

விழுப்புரத்தில் பரபரப்பு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்

விழுப்புரத்தில் பரபரப்பு
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்
டாஸ்மாக் கடையில் பணியாற்ற விற்பனையாளர்களை அனுமதிக்காததால், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 204 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி 30 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளில் பணியாற்றி வந்த 125 விற்பனையாளர்கள், 49 மேற்பார்வையாளர்கள் என 174 பேரை கலந்தாய்வு மூலம் வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த 8-ந் தேதி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் நாள் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை நடக்கும் கடைகளில் ஒரு விற்பனையாளர் என்ற அடிப்படையில் அவர்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பணியமர்த்தி உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளில் ஒரு கடைக்கு 3 விற்பனையாளர்கள் வீதம் 12 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் கடந்த 9-ந் தேதி முதல் பணிக்கு சென்றனர். ஆனால் அந்த கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருபவர்கள், கலந்தாய்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் விற்பனையாளர்கள் முறையிட்டும் உரிய பதில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நேற்று மதியம் 1 மணியளவில், ஜானகிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டு நின்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் இளங்கோவன், பொருளாளர் விஜயகுமார், துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டு டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத மேற்பார்வையாளர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், மதுபாட்டில்களை, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்க சொல்லி மேற்பார்வையாளர்கள் எங்களை நிர்பந்தித்தனர். நாங்கள் உடன்படாததால் எங்களை பணி செய்ய அனுமதிக்காமல் வெளியாட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர், மாவட்டம் முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது என்று குற்றம்சாட்டினர்.

இதுபற்றி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் தரப்பில் கூறும்போது, உயர் அதிகாரிகள் உத்தரவின்படிதான் டாஸ்மாக் மது விற்பனை நடந்து வருகிறது. வெளியாட்கள் யாரையும் பயன்படுத்தவில்லை என்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.