மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 5 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 5 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2018 11:54 PM GMT (Updated: 16 May 2018 11:54 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 5 அரசு பள்ளிகள் உள்பட 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் என 309 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாவட்டத்தில் 131 அரசு பள்ளிகளை சேர்ந்த 20,158 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 17,443 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 86.53 சதவீத தேர்ச்சியாகும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 5,755 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 5,408 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.97 ஆகும். சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 3,972 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,907 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.36 சதவீதம் ஆகும். மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 9,257 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 9,092 பேர் தேர்ச்சி பெற்றனர். 98.22 சதவீதம் ஆகும்.

131 அரசு பள்ளிக்கூடங்களில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் அழகப்பா பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் மாதிரி பள்ளி, கொளத்தூர் மாதிரி பள்ளி, தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அபிநவம் ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இதுதவிர 2 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளும், 7 சுயநிதி பள்ளிகளும், 58 தனியார் மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 2 அரசு பள்ளிகளில் 50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலே மாணவ, மாணவிகள் ஏற்கனவே கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பாடம் வாரியாக மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சில மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று அங்கு கரும்பலகையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தனர். அப்போது ஒருவருக்கொருவர் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரிவித்துக் கொண்டனர். அரசு வெளியிட்டுள்ள இணையதள முகவரி மூலமும் பலர் பிளஸ்-2 மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர்.

Next Story