குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏத்தகோவில் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் ஏத்தகோவில் கிராமத்துக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், வைகை அணையில்- சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏத்த கோவில் கிராமத்தையும் சேர்க்க வேண்டும், குன்னூர் வைகை ஆறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏத்தகோவில் கிராமத்துக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும், ஏத்தகோவில் ஊராட்சியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களை தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக் கான பொதுமக்கள் ஏத்தக்கோவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏத்தக்கோவில் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவவிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் அறிவித்தபடி குடிநீர் வினியோகம் செய்யாவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story