சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.52 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.52 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2018 12:06 AM GMT (Updated: 17 May 2018 12:06 AM GMT)

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.52 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 1.37 சதவீதம் குறைவு ஆகும்.

சேலம்,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 309 பள்ளிகளில் இருந்து 19,441 மாணவர்கள், 20,859 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 300 பேர் எழுதினார்கள்.

இந்தநிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தற்போது ரேங்க் பட்டியல் இல்லை என்பதால் கடந்த ஆண்டு போலவே இந்தாண்டும் எந்த பரபரப்பும் இல்லை. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் பிளஸ்-2 தேர்வு முடிவை கலெக்டர் ரோகிணி வெளியிட்டார். அதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை அரசு, அரசு நிதி உதவி பெறும், சுயநிதி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 309 பள்ளிகளை சேர்ந்த 40 ஆயிரத்து 300 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 36 ஆயிரத்து 882 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.52 ஆகும். கடந்த ஆண்டு(2017) பிளஸ்-2 தேர்வில் 92.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 1.37 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் தான் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன.

இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 86.53 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளோம். கல்வி மாவட்டம் வாரியாக பார்த்தால் சங்ககிரி கல்வி மாவட்டத்தில் 7,544 மாணவர்கள், 7,782 மாணவிகள் என மொத்தம் 15,326 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 13,629 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.93 சதவீதம் ஆகும்.

இதேபோல் சேலம் கல்வி மாவட்டத்தில் 11,897 மாணவர்கள், 13,077 மாணவிகள் என 24,974 பேர் எழுதினார்கள். அவர்களில் 23,253 பேர் தேர்ச்சி அடைந்தனர். இது 94.36 சதவீதம் ஆகும். விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story