ஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


ஈரோட்டில்  2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 May 2018 12:13 AM GMT (Updated: 17 May 2018 12:12 AM GMT)

ஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜீத்வீதி ஆகிய இடங்களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பைகளின் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவில் ஏற்றினார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் கடைக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story