கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் சரத்குமார் பேட்டி


கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 May 2018 2:00 AM IST (Updated: 17 May 2018 7:19 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் என்று சரத்குமார் கூறினார்.

நெல்லை, 

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரைபேரத்திற்கு வழிவகுக்கும் என்று சரத்குமார் கூறினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குதிரைபேரம்

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு சிறிதும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு என்ன தண்டனை என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவுப்படுத்த வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி மெஜாரிட்டியை பெற்று உள்ளது. ஆனால் அதை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவாக்குவதற்கு பாரதீய ஜனதாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்து உள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா ஆட்சி அமைத்தது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.

தொங்கு சட்டசபை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்திலும் தொங்கு சட்டசபை உருவாகலாம். அப்படி தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களை சந்தித்து வருகிறது.

சமத்துவத்தை விரும்புகின்ற படித்த, அறிவுள்ள, தன்னம்பிக்கை, நேர்மை, திறமையுள்ள சரத்குமாரை முதல்–அமைச்சராக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். வருகிற சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்று நான் முதல்–அமைச்சர் ஆவேன். எனக்கு வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவருடன் கூட்டணி அமைத்து இணைந்து செயல்படுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். விஜயகாந்த் உடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தால் தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவு செய்யப்படும்.

தென்காசியில் போட்டி

மக்களை பாதிக்கக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நான் தென்காசி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை. விடுபட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிட உள்ளேன். அந்த தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். விரைவில் தென்காசியில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநாடு நடத்தப்படும்.

கமல்ஹாசன் இன்னும் கட்சி தொடங்கவில்லையே, அவர் மன்றம் தான் தொடங்கி உள்ளார். அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

முன்னதாக அவர் பாளையங்கோட்டையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் மகள் சுஜானா கேஷியாவின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில், மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.கணேசன், மாநில துணை பொதுச்செயலாளர் ஈசுவரன், பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர்கள் கணேசன், தங்கராஜ், சேவியர், வில்சன், தயாளன், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, துணை செயலாளர் எம்.சி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story