காரைக்குடி பகுதியில் தொடர் மழை கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு


காரைக்குடி பகுதியில் தொடர் மழை கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2018 10:00 PM GMT (Updated: 17 May 2018 7:43 PM GMT)

காரைக்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய் களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

காரைக்குடி

ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் நிலவும் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு அச்ச மடைந்து வீட்டிற்குள் முடங்கிபோய் விடுவார்கள். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை நிலவுகிறது.

இந்நிலையில் காரைக்குடி, சாக்கோட்டை, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்தது. இது தவிர சிவகங்கை, மதகுபட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் சில கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

காரைக்குடி அருகே உள்ள மேலமாகாணம் உள்ளிட்ட சில கண்மாய்களில் நீர் வரத்து உள்ளது. இந்த மழை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் நீடித்தால் அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story