கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கோவை

கோவை ரெயில் நிலையம் எதிரில் எப்.ஏ. ஹேமில்டன் என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3 ஆயிரத்து 488 சதுர அடி பரப்பளவில் போலீஸ் கிளப் கட்டப்பட்டது. இதில் 16 அறைகள், நூலகம், சமையல் அறை உள்பட பல்வேறு வசதிகள் இருந்தன. அந்த கட்டிடம் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது.

இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அமல்ராஜ் கடந்த 2016-ம் ஆண்டு அந்த போலீஸ் கிளப் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து பழமை வாய்ந்த இந்த கட்டிடம் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகம் தமிழக போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போன்ற போலீஸ் அருங்காட்சியகம் கேரள மாநிலம் கொல்லம், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, அரியானா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் போலிசார் பயன்படுத்திய பழமையான கருவிகள்,போர் கருவிகள்,தோட்டாக்கள், வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அரிய பொருட்கள்,சீருடைகள் என்று பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அருங்காட்சியகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டுள்ள பழமையான பொருட்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், கலெக்டர் ஹரிகரன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.கே.செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 10 மணிக்கு கோவை வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு போலீஸ் அருங்காட்சியகம் வந்தார். அவினாசி சாலையில் வழி நெடுக முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கார் மூலம் ஊட்டி சென்றனர். அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Next Story