மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் முதல்-முறையாக அமைக்கப்பட்டுள்ளது போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறும் அருங்காட்சியகம் + "||" + The first time in the state of Tamil Nadu is the museum which specializes in the police department

தமிழகத்தில் முதல்-முறையாக அமைக்கப்பட்டுள்ளது போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறும் அருங்காட்சியகம்

தமிழகத்தில் முதல்-முறையாக அமைக்கப்பட்டுள்ளது
போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறும் அருங்காட்சியகம்
போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை

கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழகத்திலேயே முதன்முறையாக போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக போலீஸ் துறையின் சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் 1861-ம் ஆண்டு முதல் போலீசார் பயன்படுத்திய பல்வேறு சீருடைகள், ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், வெடி பொருட்களை கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் கருவிகள், தொலை தொடர்பு கருவிகள், விரல் ரேகை உபகரணங்கள், புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

கோவையில் 1959-ம் ஆண்டு பரபரப்பு ஏற்படுத்திய கள்ளநோட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்களும் உள்ளன. மேலும் 1760-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற வந்தவாசி போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

1982-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கோவை காவல்துறைக்கு பரிசாக வழங்கிய வீரவாள் இங்கு இடம் பெற்றுள்ளது. மேலும் மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 2004-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள், கத்தி, 1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய கோகுலன் என்ற சிறிய நீர்மூழ்கி கப்பல் மற்றும் கைத்துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள், சிறிய ரக ராக்கெட் லான்சர்கள், கத்தி, தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் போலீஸ் துறையினருக்கு அரசால் வழங்கப்படும் பதக்கங்கள், போலீஸ் துறையின் சிறப்பை வெளிப்படுத்தும் தபால் தலைகள், போலீசாரின் சீருடை மாதிரிகள் ஆகியவை அழகுற காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் துறையின் செயல்பாடுகள் மற்றும் சாகசங்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட பல ஆவண படங்களை 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

போலீஸ் துறை பற்றிய பல அரிய நூல்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 1870 முதல் 1930-ம் ஆண்டு வரை போலீசார் பயன்படுத்திய மரத்தால் செய்யப்பட்ட கேமரா, போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி தோட்டாக்கள், பாதுகாப்பு கவசங்கள், பலவித வாள்கள், ஒரே நேரத்தில் 7 கண்ணீர் புகை குண்டுகளை வீசும் அக்னி வர்ஷா, 1940-ம் ஆண்டு ரோந்து போலீசார் பயன்படுத்திய ரோந்து விளக்கு மற்றும் தராசு உள்பட பல்வேறு பழமையான பொருட்கள் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் வலிமையை பறை சாற்றும் வகையில் கார்கில் போரில் பயன்படுத்திய 28 டன் எடையுள்ள டாங்கி, நவீன ஆகாஷ் ஏவுகணை, 2 டன் எடையுள்ள நீர்மூழ்கி ஏவுகணை, பூமியில் இருந்து விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் ஆகியவை முப்படைகளால் இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. அவையும் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தால் பயன்படுத்தப்பட்ட நவீன ரோந்து படகும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்துக்கு தனியாக இணையதளமும் உள்ளது. தமிழகம் மற்றும் கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய பல்வேறு வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தப்பட்ட கைரேகைகள், ஆவணங்களையும் இங்கே பார்க்கலாம்.

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 மாதங்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.