பூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் சாவு; டிரைவர் கைது


பூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் சாவு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 10:15 PM GMT (Updated: 17 May 2018 9:46 PM GMT)

பூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி,

கேரள எல்லையையொட்டி உள்ள பனிச்சமூடு தேங்காப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் என்ற மாகீன், மாட்டு வியாபாரி. இவருடைய மகன் அல் அமீன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்புக்கான தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தான்.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாகீன் குடும்பத்துடன் தெரிசனங்கோப்பு அருகே குறத்தியறையில் குடியேறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அல் அமீன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கேசவன்புதூரை நோக்கி சென்று கொண்டிருந்தான். பூதப்பாண்டி அருகே செம்பொன்விளை பகுதியில் வந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பிய வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

சாவு; டிரைவர் கைது

இதில் தூக்கிவீசப்பட்ட அல் அமீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அல் அமீன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருவண்ணாமலை செம்மேடு பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தியை கைது செய்தனர். 

Next Story