கூடுதலாக 1,400 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் கலெக்டர் தகவல்


கூடுதலாக 1,400 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:47 PM GMT)

கூடுதலாக 1,400 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கந்தசாமி கூறினார்.

ஆரணி,

ஆரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் கண்ணமங்கலம் உள்வட்டத்தை சேர்ந்த காட்டுக்காநல்லூர், கொளத்தூர், கண்ணமங்கலம், வண்ணாங்குளம், 5.புத்தூர், அய்யம்பாளையம், மேல்நகர், கீழ்நகர், அத்திமலைப்பட்டு ஆகிய 9 ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அப்போது கலெக்டர் அதிகாரிகளிடம் ஏன் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பி உடனடியாக நிறைவேற்றும்படி கூறினார்.

பெரும்பாலும் வீட்டுமனைப்பட்டா, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், ரேஷன் அட்டை கோரியும், தெருவிளக்கு கோரியும், ஆற்று மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் தாசில்தார் ஆ.சுப்பிரமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்டவழங்கல் அலுவலர் திருமலை, துணை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரியம், பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அக்ராபாளையம் உள்வட்டத்தை சேர்ந்தவர்களிடமும், 21-ந் தேதி முள்ளிப்பட்டு உள்வட்டத்தை சேர்ந்தவர்களிடமும், 22-ந் தேதி எஸ்.வி.நகரம் உள்வட்டத்தை சேர்ந்த கிராம மக்களிடமும், 23-ந் தேதி ஆரணி உள்வட்டத்தை சேர்ந்த மக்களிடமும் மனுக்கள் பெறப்பட உள்ளது.

23-ந் தேதி நிறைவு நாளில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வுகள் காணப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நீண்ட காலமாக நிலம் பிரச்சினை சம்பந்தமாக இருந்து வரும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இங்கு வருபவர்கள் வீடு கட்டுவதற்கு இடம் உள்ளது, வசதி இல்லை என்றும், வீடு கட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், 4 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை என மின்வாரியம் மீது புகார் அளித்தனர். உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

காட்டுக்காநல்லூர் பகுதியில் ஜமுனா, கவிதா ஆகியோர் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா இருப்பதாகவும் வீடு கட்ட உத்தரவு வேண்டும் என கோரியிருந்தனர். உடனடியாக இருவருக்கும் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கிராமங்களில் 60 மனுக்கள் பெறப்பட்டது அதில் 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மாவட்டத்தில் குழந்தை கடத்தல் சம்பந்தமாக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போளூர் தாலுகாவில் சாமி கும்பிட வந்தவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து கிராமமக்கள் தாக்கியதில் ஒருவர் இறந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பந்தமாக 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பதிவு செய்து அரசு உதவி பெறாத கூடுதலாக 1,400 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஏரிகளில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story