மாவட்ட செய்திகள்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கபடி மைதானம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல் + "||" + Rs 30 lakh allocation collector to set up the kabaddi ground in Trichy Anna Stadium

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கபடி மைதானம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கபடி மைதானம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கபடி மைதானம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டி நேற்று காலை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். டென்னிஸ் பாலை, பேட்டால் அடித்து போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை கமிஷனர்கள் சக்தி கணேசன், மயில்வாகனன், உதவி கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 470-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக, அதாவது 12 வயதுக்குட்பட்டவர்கள், 14 வயதுக்குட்பட்டவர்கள், 16 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்து டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ளர்கள். மாநகர போலீஸ் கமிஷனர் எடுத்த முயற்சிதான், இன்று டென்னிஸ் போட்டி முதன் முதலாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவில் நடைபெறுகிறது. கோடை விடுமுறையில் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வேளையில் டென்னிஸ் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் இங்கு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை பாராட்டுகிறேன்.

திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் கலந்து கொள்ளும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் போட்டியில் அடுத்த கட்ட நிலைக்கு செல்வதற்கு அரங்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கு மாநில, தேசிய, சர்வதேச அளவில் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள, இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெறுவதற்கு பல்வேறு ஆர்வலர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

20-ந் தேதிவரை நடைபெறும் டென்னிஸ் விளையாட்டு போட்டியை தேவைப்பட்டால், ஓரிரு நாட்கள் நீட்டிப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். வருகிற ஆண்டிலும் இந்த டென்னிஸ் போட்டி இன்னும் சிறப்பாக நடத்தப்படும். டென்னிஸ் போட்டி என்றால் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ,் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ், சென்னை ஓபன் டென்னிஸ் என்றுதான் சொல்வார்கள். இன்று ‘திருச்சி ஓபன் டென்னிஸ்’ என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை தங்கி கற்றுக் கொள்வதற்கு நல்ல விடுதி வசதியுள்ளது. இந்த அண்ணா விளையாட்டு அரங்கில ரூ.30 லட்சம் செலவில் கபடி மைதானம் அமைக்கப்பட உள்ளது.

கூடை பந்து மைதானமும் அமைக்கப்பட உள்ளது. அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். வீரர், வீராங்கனைகளை விளையாட்டில் ஊக்குவிக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகர போலீஸ்் துணை கமிஷனர்கள் சி.சக்திகணேசன், மயில்வாகனன், சப்-கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.