கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று: 2,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று: 2,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் சூறைக்காற்று வீசுவதால் 2,500 நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீன் விலை மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4 ஆயிரம் பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்ளன. இந்த மீனவர்கள் அனைவரும் விசைப்படகு மீனவர்கள் செல்லக்கூடிய திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள்.

தற்போது விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க செல்வதற்கு தடைகாலம் உள்ளது. இதனால் நாட்டுபடகு மீனவர்கள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியில் மழையுடன் கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக 2,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடல் செல்லக்கூடிய படகுகள் தவிர்த்து கரை ஓரங்களில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 1,500 நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிதொழில் செய்து வருகின்றனர்.

விசைப்படகுகள் மீன்பிடி தடைகாலத்தில், நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் நாட்டுப்படகு மூலம் பிடித்து வரக்கூடிய குறைந்த அளவு மீன்களையும், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றுவிடுகின்றனர்.

இதனால் மீன் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கட்டுமாவடி, உடையநாடு போன்ற பகுதிகளில் உள்ள மீன் மார்கெட் மற்றும் மீன் ஏலக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 

Next Story