குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் போராட்டம்


குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

வேதாரண்யம் கடற்கரையில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக்கோரி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை தி்ட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 44 லட்சம் மதிப்பில் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு இதற்கான ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த பணியை நகராட்சி மூலம் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குப்பைக் கிடங்கை கடற்கரையில் அமைக்கக்கூடாது என்று ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த ஒரு வார காலமாக தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், கட்டுமானப்பணியை தடுத்து நிறுத்துதல், பணி செய்ய விடாமல் அங்கேயே காத்திருக்கும் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்காக பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அங்கு பணிகள் நடைபெறுவதை அறிந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம மக்கள் ஒன்று கூடினர். 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆகியோர் குப்பைக்கிடங்கு அமைக்கும் இடத்திற்கு பணியை தடுத்து நிறுத்துவதற்காக வந்தனர்.

இதனையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீனவ கிராம மக்கள் அங்கு திரண்டு வந்ததும் அங்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டு இருந்த போலீசார், கிராம மக்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோஷம் போட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களில் சிலர் குழிதோண்டும் பணியை நிறுத்துவதற்காக ஓடினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகே கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திட்டத்தை அரசு கைவிடா விட்டால் அனைத்து பகுதி மீனவர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக ஆறுகாட்டுத்துறை கிராம நாட்டார் சேதுபதி நாட்டார் உள்பட 6 பேரை போலீசார் காலையிலேயே கைது செய்து தனியார் திருமண மண்டபத்தி்ல் தங்க வைத்தனர். பின்பு மீனவர்கள் நடத்திய போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரெத்தினம் கலந்து கொண்டு போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சேதுபதி உள்பட 6 பேரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

அதே நேரத்தில் திட்டமிட்டபடி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திற்கு நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு, இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு துறையினரும் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் வேதாரண்யம் தாசில்தார் சங்கர் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து இருந்தனர். மீனவர்களின் இந்த போராட்டத்தால் கட்டுமானப்பணி நடைபெற்ற இடத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பதற்றமும், பரபரப்பும் நீடித்தது. 

Next Story