காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் உறுதியாக வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் உறுதியாக வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

காவிரியில், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் உறுதியாக வரும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்,

கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்ககூடிய வகையில் முதல் முயற்சியாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள், அடித்தட்டு மக்கள் வளர்ச்சிக்கு பலமாக அவரது ஆட்சி அமையும். கர்நாடகாவில் பா.ஜ.க அரசு அமைய கவர்னர் ஒப்புதல் கொடுத்து 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட்டுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?. இந்த கால அவகாசத்தில் குதிரைபேரம் நடக்கும் என்று சொல்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள். இதில் பேரம் பேச தேவையில்லை. பா.ஜ.க ஆட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனைக்கு பா.ஜ.க நல்ல முடிவை எடுத்து வருகிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் துணையாக இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் உறுதியாக வரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் ஏற்கனவே கூறியது போல், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து காவிரி விவகாரம், இரு மாநில உறவுகள் குறித்து பேசி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்தால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும். காவிரி விவகாரம் முள்ளில் விழுந்த சேலை. அதை கவனமாகத்தான் எடுக்க வேண்டும். சேலையை முள்ளில் போட்டது தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தான்.

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டிய வகையில் நடவடிக்கை இருக்கும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க.வின் நிலைப்பாடு ஒன்றாக இல்லை. அவர்களது நிலைப்பாடு வேறு. எங்களது நிலைப்பாடு வேறு. பா.ஜ.க. நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகரை அழைக்கவில்லை. அவர் தனிநபர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றேன். எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் 29 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மட்டும் இந்த திட்டம் வேண்டாம் என்று கூறுகிறது. இந்த திட்டத்தின் லாபம், நஷ்டம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். வேண்டாம் என்று தமிழகம் தெரிவித்த நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து 1 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் எந்த திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது, வேலைவாய்ப்பை உருவாக்க கூடாது என சதி நடக்கிறது.

தமிழகத்தை யுத்தகளமாக மாற்றுவதற்கு சிலர் பார்க்கின்றனர். இளைஞர்களை யுத்த களத்தில் இறக்கிவிடப் பார்க்கின்றனர். இதை சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். ஆனால் தமிழகம் பின்தங்கி செல்கிறது.

தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு மிகப் பெரிய சதிச்செயல் நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் செல்வாக்கே இல்லாத சிலர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். கடந்த 1977-ம் ஆண்டு தமிழகத்தில் நக்சலைட் வந்தபோது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்தாரோ அதுபோன்ற நடவடிக்கை எடுப்பதற்கான சூழலை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story